கெஜ்ரிவால் தர்ணா போராட்டம்..!
டெல்லி தலைமைச் செயலாளர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து, கடந்த 4 மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் யாரும் அமைச்சர்களை சந்திப்பதில்லை என்றும், அரசு கொண்டுவரும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதையடுத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிப்பதற்காக நேற்று மாலை சென்ற முதலமைச்சர் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களை, துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, துணை நிலை ஆளுநர் வீட்டின் வரவேற்பறையில், அவர்கள் அனைவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பிறகும் துணை நிலை ஆளுநர் வராததை அடுத்து, முதலமைச்சர் கெஜ்ரிவால், அமைச்சர்கள் மனீஷ் சிசோடியா உள்ளிட்டோர் துணை நிலை ஆளுநர் வீட்டின் வரவேற்பறையிலேயே படுத்து உறங்கினர்.
இருப்பினும், இன்று காலை வரை துணை நிலை ஆளுநர் சந்திக்க வராததால், அவர்களது போராட்டம் 12 மணி நேரத்துக்கும் மேலாக நீடிக்கிறது. இதை தனது டுவிட்டர் பக்கம் மூலம், துணை நிலை ஆளுநர் கவனத்துக்கு கொண்டு சென்ற கெஜ்ரிவால், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் தவறான நடவடிக்கையை ஆதரிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.