இந்திய எல்லையில் பிடிபட்ட தீவிரவாதிகளுடன் ஒரு டி.எஸ்.பி போலீஸ் அதிகாரி! ‘பகீர்’ பின்னணி!
- காஷ்மீர் மாநில எல்லை பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ உள்ளதாக உளவுத்துறைக்கு எச்சரிக்கை தகவல் கிடைத்தது.
- அதன்படி நடைபெற்ற சோதனையில் சந்தேகப்படும் படியாக 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் ஜனாதிபதி விருது வாங்கியவர் டி.எஸ்.பி அதிகாரி.
இந்திய ராணுவத்திற்கு அண்மையில் காஷ்மீர் மாநில எல்லை பகுதியிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக எச்சரிக்கை தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவம் மற்றும் போலீசார் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அந்த சமயம் ஒரு வாகன சோதனையில் சந்தேகப்படும்படியான 3 நபர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மடக்கி பிடித்தனர். அதில் இரண்டு பேர் பாகிஸ்தான் தீவிரவாதிகள் எனவும் ஒருவர் ஸ்ரீநகர் போலீஸ் டி.எஸ்.பி தேவீந்தர் சிங் எனவும் தெரிய வந்துள்ளது. இந்த தேவீந்தர் சிங் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். துணிச்சலான சம்பவத்தில் ஈடுபட்டதற்காக ஜனாதிபதி விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து விசாரிக்கையில், தீவிரவாத கும்பலுடன் அந்த போலீஸ் அதிகாரிக்கு தொடர்பு இருந்துள்ளது நிரூபணமாகியுள்ளது. தீவிரவாதிகளில் ஒருவன் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த சையத் நவீத்பாபு. இன்னொருவன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த ஆசிப் ரத்தர் என்பது தெரியவந்துள்ளது.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், போலீஸ் டி.எஸ்.பி தேவீந்தர் சிங், 2 தீவிரவாதிகளும் காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக தப்பி செல்ல உதவிபுரிந்துள்ளார். இவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் 3 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
போலீஸ் டிஎஸ்பி தேவீந்தர் சிங் வீட்டில் சோதனை நடத்தியபோது ஏகே 47 துப்பாக்கி , 2 பிஸ்டல் துப்பாக்கி, 3 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தற்போது அவர் அன்று பணிக்கு வரவில்லை எனவும், மேலும் நான்கு நாட்கள் விடுமுறைக்கு விண்ணப்பித்து இருந்ததாகவும் மேல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.