கர்நாடக மக்களின் ஒற்றுமை மற்ற மாநிலங்களுக்கு எச்சரிக்கை மணி.! முன்னாள் முதல்வர் H.D.குமாரசாமி கருத்து.!
காவிரியில் இருந்து உச்சநீதிமன்ற உத்தரவு படி உரிய அளவு தண்ணீர் தர வேண்டும் என தமிழக அரசு தரப்பும், காவிரியில் கர்நாடக மக்களுக்கு குடிக்கவே தண்ணீர் இல்லாத நிலையில் இருப்பதால், எங்களால் தண்ணீர் தர முடியாது என கர்நாடக தரப்பு கூறி வருகிறது. இந்நிலையில் தான் அண்மையில் கர்நாடக அரசு , காவிரி ஒழுங்காற்று மையத்தின் பரிந்துரை படி உரிய அளவு தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்தும், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது எனவும் இன்று கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு சுமார் 1600க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் இன்று கர்நாடகா மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த முழு அடைப்புக்கு எதிர்கட்சிகளான பாஜக, மஜக கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன. இது குறித்து மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான H.D.குமாரசாமி தனது X சமூகவலைதள பதிவில் தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
இன்றைய முழு அடைப்பு போராட்டம் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நிலம், மொழி, நிலத்தடி நீர் பிரச்சினை வரும்போது நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கர்நாடக குடும்பத்தில் உள்ள இந்த நல்லிணக்கமும் ஒற்றுமையும் அண்டை மாநிலங்களுக்கு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும். கன்னட உணர்வுகளை காங்கிரஸ் அரசு நசுக்கக் கூடாது. காவேரி எங்களுடையது என H.D.குமாரசாமி பதிவிட்டுள்ளார்.
கர்நாடக முழு அடைப்பு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் நேற்று நள்ளிரவு முதல் இன்று நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.