கர்நாடகா : குப்பை கூடையை வைத்து ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் …!
கர்நாடகா மாநிலத்தில் குப்பை கூடையை வைத்து ஆசிரியரை தாக்கிய மாணவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவணகெரே மாவட்டம் சன்னகிரி நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் ஆசிரியரை தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாணவர் ஒருவர் குப்பைத்தொட்டியை வைத்து ஆசிரியரை தாக்குவது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.
ஆசிரியர் வகுப்பறையில் நுழைந்ததும் குட்கா பொருட்கள் சிதறிக் கிடப்பதை பார்த்து ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என மாணவர்களிடம் கூறியதாகவும், இதனால் தான் ஆசிரியரின் தலையில் குப்பைத்தொட்டி வைத்து மாணவர்கள் தாக்கியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக தொடக்க மற்றும் இடைநிலை கல்வித் துறை அமைச்சர் பி சி நாகேஷ் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், தாவணகெரே மாவட்டம் சன்னகிரி நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தாக்கப்பட்டது பொறுத்துக்கொள்ள முடியாது எனவும்,மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்,நாங்கள் எப்பொழுதும் ஆசிரியர்களுடன் இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.