கர்நாடக மாணவி பாலியல் வன்கொடுமை – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது.!
கர்நாடகாவின் மைசூரில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது.
கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார். கடந்த 24ம் தேதி, மைசூரு லலித்ரிபுரா பகுதியில் உள்ள திப்பையனகெரே வனப் பகுதியிலிருந்து தன்னுடன் படிக்கும் மாணவருடன் சாமுண்டி மலைக்கு சென்றுள்ளார்.
அப்போது, அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், அந்த மாணவரைத் தாக்கிவிட்டு, அந்த பெண்ணை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது நண்பர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடைபெற்றது. மேலும் இதற்கு கண்டங்கள் வலுப்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தற்போது தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 5 கூலித்தொழிலாளர்கள் கைதான நிலையில், மேலும் ஒருவர் தலைமறைவாக இருப்பதாக கூறி, அவரை தேடும் பணியில் கர்நாடக போலீஸ் ஈடுபட்டுள்ளது.
கைதானவர்கள் திருப்பூர், ஈரோடு பகுதிகளை சேர்ந்த கார்ப்பெண்டர், எலக்ட்ரிஷன், ஓட்டுநர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மாநில அரசு ஒரு சிறப்பு குழுவை அமைக்கும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் எஸ் பொம்மை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.