கர்நாடகாவுக்கு மட்டுமே தண்ணீர்.. மழை வந்தால் காவேரி நீர் தருகிறோம்.! கர்நாடக அமைச்சர் தகவல்.!
கர்நாடகாவுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதாகவும், மழை வந்தவுடன் காவேரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடுகிறோம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
இந்த ஆண்டு குருவை சாகுபடிக்காக காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்றும், ஏற்கனவே பருவமழை எதிர்பார்த்ததை விட குறைவாக பெய்த காரணத்தால் தமிழகத்தில் நீர் வரத்து மிக குறைவாக உள்ளதாகவும் குறிப்பிட்டு, தமிழகத்திற்கு கர்நாடக அரசு தரவேண்டிய அளவை விட அம்மாநில அரசு குறைவான நீரையே கொடுத்துள்ளதாகவும் கூறி தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை டெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.
அப்போது ஜூன் – ஜூலை மாதத்திற்கான தமிழகத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக கர்நாடக அரசு திறந்து விட அம்மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் கேட்டிருந்தார்.
இது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் துறை அமைச்சர் ஓரிரு நாட்களில் இறுதி முடிவு எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக கர்நாடக துணை முதல்வரும் அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் கூறுகையில் கர்நாடகா மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தது போக, மீதமுள்ள தண்ணீரை மட்டும் தமிழகத்திற்கு திறந்து விடுவோம். எதிர்பார்த்த அளவு மழை இல்லாத காரணத்தால் அணையில் நீர்வரத்து குறைவாகவே உள்ளது என்று குறிப்பிட்டார்.
ஓரிரு நாட்களில் மழை பெய்தவுடன் நீர்வரத்து அதிகரித்தவுடன் தண்ணீர் திறந்து விடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், நீதிமன்ற தீர்ப்புக்கு எப்போதும் கர்நாடக அரசு கட்டுப்படும். மழை பெய்து நீர்வரத்து அதிகரிக்கும் போது இரு மாநிலங்களுக்கும் தேவையான தண்ணீர் நிச்சயம் கிடைக்கும் என்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.