கனமழை எதிரொலி.. தமிழகத்திற்கான தண்ணீர் திறந்துவிடப்படும்.! கர்நாடக அமைச்சர் பதில்.!
கர்நாடகா: காவிரியில் போதிய அளவு தண்ணீர் இல்லை என்று கடந்த வாரம் வரையில் கர்நாடக அரசு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட மறுப்பு தெரிவித்து வந்தது. காவிரி ஒழுங்காற்று வாரியம் தினம் ஒரு டிஎம்சி வீதம் இம்மாதம் முழுக்க வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்து ஒருநாளைக்கு வெறும் 8 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படும் என அம்மாநில அரசு கூறியிருந்தது.
இப்படியான சூழலில் தான் கடந்த வாரம் முதல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கர்நாடக அணைகள் நிரம்பி தண்ணீரை திறந்துவிட வேண்டிய சூழல் நிலவியது. தற்போது வரையில் வினாடிக்கு 70ஆயிரம் கனஅடி நீர் வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கர்நாடக நீர் இருப்புநிலை நிலவரம் குறித்து அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், மழையால் கர்நாடகாவுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரி நடுவர் நீதிமன்ற உத்தரவுப்படி 40 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும். இன்றைய நிலவரப்படி 30 டிஎம்சி அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுவிட்டது. இம்மாதம் ஜூலை 31ஆம் தேதிக்குள் 40 டிஎம்சி தண்ணீரை விடுவித்து எங்களின் ஒதுக்கீட்டை நிறைவு செய்வோம் என எதிர்பார்க்கிறோம் என டி.கே.சிவகுமார் கூறினார்.