நான் யார் முதுகிலும் குத்த மாட்டேன்.. மாற்று கட்சிக்கு செல்ல மாட்டேன்.! டி.கே.சிவகுமார் உறுதி.!
நான் யார் முதுகிலும் குத்த மாட்டேன் மாற்று கட்சிக்கு செல்ல மாட்டேன் என கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் பேசியுள்ளார்.
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று 2 நாட்கள் கடந்த பின்னும் இன்னும் முதல்வர் யார் என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் ஆலோசனை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் யாருடைய முதுகிலும் குத்த மாட்டேன். யாரையும் மிரட்டி ஆதாயம் தேட மாட்டேன். அந்த மாதிரியாக நான் நடந்து கொண்டது இல்லை. நான் ஏன் வேறு கட்சிக்கு செல்ல வேண்டும்.? எல்லோரும் ஒருநாள் இறக்க தான் போகிறோம். நான் ஏன் மோசமான பெயருடன் சாக வேண்டும் என வெளிப்படையாக தனது நிலை குறித்து பேசியுள்ளார் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார்.