கர்நாடக சட்டசபை தேர்தல் : வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக.! 52 புதிய நபர்களுக்கு வாய்ப்பு.!
கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறஉள்ளது . இதனை முன்னிட்டு பிரதான கட்சியினர் தங்கள் கட்சி வேட்பாளர்களை தேர்வுகளை செய்து அறிவித்து வருகின்றனர். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி இதுவரை 166 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
வாரிசுகளுக்கு வாய்ப்பு :
தற்போது பாஜகவும் தங்கள் தரப்பு முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், 189 வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் முக்கிய தலைவர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஷிகாரிபுராவில் போட்டியிடுகிறார்.
52 புதிய வேட்பாளர்கள் :
கர்நாடக பாஜக தேர்தல் பொறுப்பாளரான அருண் சிங் கூறுகையில், இந்த தேர்தலில் பாஜக சார்பில் இதுவரை 52 புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 32 பேருக்கும், பட்டியல் இனத்தை சேர்ந்த 30 பேருக்கும், பழங்குடியினத்தை சேர்ந்த 16 பேருக்கும் இந்த தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஐஏஎஸ் – ஐபிஎஸ் அதிகாரிகள் :
இந்த வேட்பாளர் பட்டியலில், 8 வழக்கறிஞர்கள், 9 மருத்துவர்கள், 31 முதுகலை பட்டதாரிகள், ஒரு ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி மற்றும் ஒரு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மற்றும் நான்கு ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் பட்டியலில் உள்ளனர் என்றும், 189 வேட்பாளர்களில் 8 பெண்கள் என்றும் கர்நாடக பாஜக தேர்தல் பொறுப்பாளரான அருண் சிங் தெரிவித்தார்.