கேரளா புதிய துறைமுகத்தில் 2,000 வேலை வாய்ப்புகள்.! கரண் அதானி உறுதி.!
கேரளா: விழிஞ்சம் துறைமுகத்தில் 2,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், 2028-29இல் 5,500 வேலைவாய்ப்புகளாக இது உயரும் என்றும் கரண் அதானி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரபிக் கடலோரத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது விழஞ்சம் துறைமுகம். விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் மொத்தம் 8,867 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டுள்ளது . கேரள மாநில அரசு சார்பில் 5,595 கோடி ரூபாயும், மத்திய அரசு சார்பில் 818 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொது-தனியார் கூட்டாண்மையில் இந்த விழிஞ்சம் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் 2016 இல் தொடங்கப்பட்டன. அதற்கு முன்னதாக அதானி நிறுவனத்துடன் கடந்த ஆகஸ்ட் 17,2015ஆம் ஆண்டே மாநில அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டு கேரள அரசு மற்றும் அதானி விழிஞ்சம் போர்ட் பிரைவேட் லிமிடெட் (AVPPL) உடன்படிக்கை தயாரானது.
இந்த துறைமுகத்திற்கு இன்று முதன் முறையாக “சான் பெர்னாண்டோ” எனும் பன்னாட்டு சரக்கு கப்பல் வந்தடைந்தது. சுமார் 1000 கன்டெய்னர்கள் ஏற்றும் அளவுக்கு மிக பெரிய சரக்கு கப்பல் இன்று விழிஞ்சம் துறைமுகத்திற்கு வந்தடைந்ததை கேரளா முதல்வர் பினராயி விஜயன் வரவேற்று தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதே போல அதானி குழும தலைவர் கௌதம் அதானியும் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் விழிஞ்சம் துறைமுகத்திற்கு “சான் பெர்னாண்டோ” வந்தடைந்ததை குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.
விழிஞ்சம் துறைமுக நிகழ்வில் கலந்துகொண்டுள்ள அதானி போர்ட்கள் மற்றும் SEZ லிமிடெட் (APSEZ) நிர்வாக இயக்குநர் கரண் அதானி பேசுகையில், “எங்கள் துறைமுகத்தில் இப்போது நிறுத்தப்பட்டுள்ள சான் பெர்னாண்டோ , இந்திய கடல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையின் அடையாளமாகும்.
இந்தியாவில் உள்ள வேறு எந்த துறைமுகத்திலும் இல்லாத தொழில்நுட்பம். ஏன் எங்களின் சொந்த முந்த்ரா துறைமுகத்தில் கூட இல்லாத தொழில்நுட்பம் இங்குள்ளது. இங்கு தெற்காசியாவின் மிகவும் மேம்பட்ட கொள்கலன் (கண்டெய்னர்) கையாளுதல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
2028-29 ஆம் ஆண்டுக்குள் கேரள அரசு மற்றும் அதானி விழிஞ்சம் துறைமுகத்தின் மொத்த முதலீடு ரூ.20,000 கோடியாக இருக்கும். இந்த துறைமுகத்தில், நவீன மீன்பிடி துறைமுகம், பதுங்கு குழி வசதிகள், வெளிவட்டச் சாலை, கடல் உணவு பூங்கா, கப்பல் சுற்றுலா வசதிகள் உட்பட பல்வேறு சுற்றுப்புறங்களில் துணை மேம்பாடுகளிலும் கவனம் செலுத்துகிறோம்.
கட்டுமானம், துறைமுக செயல்பாடுகள் மற்றும் இன்னும் பிற பிரிவுகளில் நாங்கள் ஏற்கனவே 2,000 க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்கியுள்ளோம். இதில் மேலும், முன்னேற்றங்கள் கண்டு விழிஞ்சத்தில் 5,500க்கும் மேற்பட்ட கூடுதல் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று கரண் அதானி இன்றைய நாள் விழிஞ்சம் துறைமுக நிகழ்வில் குறிப்பிட்டு பேசினார்.