சிவனுக்கான கன்வார் யாத்திரை..! உச்சநீதிமன்றம் ‘கிடுக்கிப்பிடி’ உத்தரவு.!
டெல்லி: கன்வார் யாத்திரை நடைபெறும் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கடைகளில் உரிமையாளர் பெயரை வெளிப்படுத்த வேண்டும் என்ற மாநில அரசுகளின் உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது
இந்து கடவுள் சிவனுக்கு அபிஷேகம் செய்யவதற்கு கங்கையில் இருந்து புனித நீர் எடுக்கும் ஆன்மீக நிகழ்வு இன்று முதல் கன்வார் யாத்திரை எனப்படும் காவடி யாத்திரை எனும் பெயரில் தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் இந்த ஆன்மீக நிகழ்வு கங்கை ஆறும் ஓடும் மாநிலங்களில் நடைபெறும். இதற்கு வடமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள்.
அண்மையில், உத்திர பிரதேச மாநில அரசு, யாத்திரை குறித்து புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, இந்த யாத்திரை நடைபெறும் பகுதிகளில் செயல்படும் உணவகங்கள், அதன் உரிமையாளர், வேலையாட்கள் விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதனால் யாத்திரை செல்லும் வழியில் கடை வைத்திருக்கும் அல்லது கடையில் வேலை பார்க்கும் சிறுபான்மையினருக்கு பொருளாதார ரீதியில் சிக்கல் ஏற்படும் சூழல் நிலவியது.
மேலும், இதே போன்ற உத்தரவை உத்தரகாண்ட், மத்திய பிரதேச மாநில அரசுகளும் பிறப்பித்ததாக கூறப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்ட இவ்வாறான உத்தரவுகளுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இதே போல கன்வார் யாத்திரை தொடர்பாக பல்வேறு வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகையில், நீதிபதி அமர்வு மிக முக்கிய உத்தரவை பிறப்பித்தனர். அதில், மாநில அரசுகளின் இத்தகைய நடவடிக்கைகள் சிறுபான்மையினரை பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்தும் நடவடிக்கை என்றும், இந்த நடவடிக்கைகள் அரசியல் சாசன அமர்வுக்கு எதிரானது என்றும் கூறி, கடை உரிமையாளர்களின் பெயர்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற மாநில அரசுகளின் உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
மேலும், இவ்வாறான உத்தரவுகளை பிறப்பித்த மாநில அரசுகள் அந்த உத்தரவுகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறி வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.