டி-ஷர்ட் அணிய தடையா? இதுதான் அவர்கள் கொடுக்கும் மரியாதை! கனிமொழி பேட்டி!
நாடாளுமன்றத்திற்கு பிரதமர் மோடி வந்த நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என திமுக எம்பி கனிமொழி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்க அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இதனால், திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று தொகுதி மறுவரையறை குறித்து வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட் அணிந்து கொண்டு சென்றனர். மக்களவையில் இதுகுறித்து விவாதம் நடத்த தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், தொடர் அமளி காரணமாக அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு, நாளை வரை அவையை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
அவை ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கூறுகையில், நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் கூட்டணி இயக்கங்கள் முதலமைச்சர் முன்வைத்துள்ள தொகுதி மறுவரையறை குறித்து தொடர்ந்து விவாதம் எழுப்பி வருகிறோம். ஆனால், எங்களுக்கு அவையில் தொடர்ந்து அனுமதி இல்லை என்று மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு அதே உடையுடன் நாடாளுமன்றத்திற்குள் சென்றோம்.
டி-ஷர்ட் கூடாது?
ஆனால், முன்னெப்போதும் இல்லாமல் டிஷர்ட் அணிந்து கொண்டு வரக்கூடாது என்றும் சட்டையை மாற்றிவிட்டு வர வேண்டும் என்றும் சொன்னார்கள். அவை ஒத்திவைக்கப்பட்டது. மீணடும் அவை கூடியது, நாங்கள் சட்டையை மாற்றவில்லை. பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கு முன்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாங்கள் சொல்லும் கருத்துக்கள் அடங்கிய மாஸ்க் அணிந்து கொண்டு வந்துள்ளனர். அதற்கென உடைகள் அணிந்து கொண்டு வந்துள்ளனர். சால்வை அணிந்து வந்துள்ளனர். அதே ஆளும் கட்சியினர் கூட அவர்களின் நம்பிக்கையை சால்வை, உடைகள் அணிந்து வந்துள்ளனர். அவர்களை எல்லாம் ஏற்றுக்கொள்ளும் அவைத்தலைவர், எங்களை மட்டும் இப்படி சொல்கிறார்.
இது ஜனநாயகத்திற்கு எதிரானது.
அவர்களது நோக்கம்..,
அவர்களை பொறுத்தவரை எதிர்க்கட்சிகள் இல்லாமல் அவை நடத்த வேண்டும் என முயற்சி செகிறார்கள், எதிர்கருத்துக்கள் இல்லாமல் அவை நடத்த வேண்டும் என அவை நடத்துகிறார்கள். நாங்கள் வாழ்க வாழ்க எனக் கூறினால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களை கூட இவர்கள் குறைத்துவிட்டனர். அதில் பிரதமர் மோடி நாடாளுமன்றம் வரும் நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இவர்கள் நாடாளுமன்றத்தின் மீது வைத்திருக்கும் மரியாதை இவ்வளவு தான்.
பொறுத்திருந்து பாப்போம்
தொகுதி மறுவரையறை குறித்து வரும் 22ஆம் தேதி நாடு முழுவதும் இருக்கும் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிணைத்துள்ளார். நாளையும் நாடாளுமன்ற வளாகத்தில் நாங்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொள்வோம். வழக்கம் போல அனுமதிப்பார்களா இல்லையா என்பதை பொருதிருத்து தான் பார்க்க வேண்டும். தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்தும் வரை இது தொடர்ந்து நடைபெறும் என திமுக எம்பி கனிமொழி கூறினார்.