ஆம் ஆத்மியில் இருந்து பதவி விலகி ஒரே நாளில் பாஜகவில் இணைந்தார் கைலாஷ் கெலாட்!
ஆம் ஆத்மி கட்சியின் புதிய அமைச்சராக, நாங்கலோய் ஜாட் தொகுதி எம்.எல்.ஏவான ரகுவிந்தர் ஷோக்கீன் பதவியேற்க உள்ளார்.
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார் . ஆம் ஆத்மி கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், நேற்று கட்சி, அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், பதவி விலகிய 24 மணி நேரத்தில் (ஒரே நாளில்) இன்று டெல்லி பாஜக அலுவலகத்தில் அக்கட்சியில் இணைந்தார். இதனால், கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதாவது, டெல்லியின் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கைலாஷ் கெலாட் நேற்று திடீரென ராஜினாமா செய்ததோடு, ஆளும் ஆம் ஆத்மி அரசு, மக்களுக்காக அல்லாமல், அரசியலுக்காக சண்டையிட்டுக் கொண்டிருப்பதாக ஆம் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியில் இருந்து விலகினார்.
இதற்கிடையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் புதிய அமைச்சராக, நாங்கலோய் ஜாட் தொகுதி எம்.எல்.ஏவான ரகுவிந்தர் ஷோக்கீன் பதவியேற்க உள்ளார். அமைச்சரவையில் இருந்து விலகி பாஜகவில் தன்னை கைலாஷ் கெலாட் இணைத்துக்கொண்ட நிலையில், அந்த துறையை ரகுவிந்தர் ஷோக்கீன் கவனிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.