#JustNow: மேற்குவங்க அமைச்சரை கைது செய்தது அமலாக்கத்துறை!
ஆசிரியர் ஆட்சேர்ப்பு ஊழல் தொடர்பாக மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை கைது செய்தது அமலாக்கத்துறை.
மேற்கு வங்க வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதில் முறைகேடு செய்ததாகக் கூறப்படும், ஊழல் தொடர்பான வழக்கில் 26 மணி நேரம் விசாரணை நடத்திய பிறகு அமலாக்க இயக்குனரகம் (ED) கைது செய்தது. அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின், நெருங்கிய கூட்டாளி அர்பிதா முகர்ஜி வீட்டில் ரூ.20 கோடி சிக்கிய நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. முகர்ஜியும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கைதான பார்த்தா சாட்டர்ஜி, சால்ட் லேக்கில் உள்ள CGO வளாகத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆசிரியர் நியமிப்பதில் முறைகேடு செய்ததாகக் கூறப்படும் வழக்கில் நேற்று காலை முதல் அவரிடம் விசாரணை நடத்திய எங்கள் அதிகாரிகளுக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்றும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் ED அதிகாரி கூறினார். ஊழல் நடந்தபோது சாட்டர்ஜி மாநிலக் கல்வி அமைச்சராக இருந்தார்.
இந்த ஊழல் குறித்து விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மத்திய புலனாய்வு அமைப்புயின் (சிபிஐ) எஃப்ஐஆர் அடிப்படையில் பணமோசடி பற்றி அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. முகர்ஜியின் வளாகத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் நோக்கம் மற்றும் பயன்பாடு கண்டறியப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.