#JustNow: மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் கைது!
மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் தடுப்புப் பிரிவுகளின் கீழ் கைது.
மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் தடுப்புப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்த ஹவுரா பகுதிக்கு செல்ல முற்பட்டதால் மேற்குவங்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதாவது, ஹவுராவில் வன்முறை காரணமாக அங்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், இந்த நேரத்தில் மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் அங்கு சென்றபோது, தடுப்புப் பிரிவுகளின் கீழ் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, நபிகள் நாயகம் பற்றி பாஜக செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை கைது செய்யக்கோரி நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. அந்தவகையில்,
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பஞ்சால் பகுதியில் இன்று காலை வன்முறை ஏற்பட்டது.
ஹவுராவில் நடைபெற்ற போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் அங்குள்ள உள்ளூர் கிளப்பை தாக்கியதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் கலைக்க முயன்றபோது, போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தினர். இதன்பின் வன்முறை பரவுவதை தடுக்க மாநில அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மாநிலத்தின் வன்முறை மையமாக மாறியுள்ள ஹவுராவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், மேற்கு வங்கம் மாநிலம் புதிய ஹவுரா போலீஸ் கமிஷனராக ஐபிஎஸ் பிரவீன் திரிபாதியும், புதிய ஹவுரா ரூரல் எஸ்பியாக ஐபிஎஸ் ஸ்வாதி பங்காலியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 144 தடை உத்தரவை மீறி அங்கு செல்ல முற்பட்டதால் அம்மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் கைது செய்யப்பட்டார்.