#JustNow: குடியுரிமை திருத்த சட்ட வழக்கு – செப்.12-ல் விசாரணை!
சிஏஏ சட்டத்தை எதிர்த்த மனுக்களை செப்டமபர் 12-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை செப்டமபர் 12-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான அமர்வு, சிஏஏ சட்டத்தை எதிர்த்த மனுக்களை விசாரிக்க உள்ளது. தாக்கல் செய்யப்பட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசால் குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டத்தின்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து தப்பி வந்த இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், சமணர்கள், பவுத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க புதிய சட்டம் வகை செய்கிறது. இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் 6 ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருந்தால் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டது.
மேலும் 2014-ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அல்லது அதற்கு முன்பாகவோ மேல்குறிப்பிட்டுள்ள நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் மட்டுமே இந்திய குடியுரிமையை பெற விண்ணப்பிக்க தகுதி பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. நாட்டின் பல மாநிலங்களிலும் சி.ஏ.ஏ.எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. அதுமட்டுமில்லாமல் உச்சநீதிமன்றத்தில் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டது. இந்த வழக்குகளை தான் வரும் 12-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.