#JustNow: இது நடந்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு.
குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2017 குஜராத் சட்டசபை தேர்தலில், 182 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பாஜக 99 இடங்களைக் கைப்பற்றியது. அதே நேரத்தில் 77 இடங்களை வென்று காங்கிரஸ் தனது எண்ணிக்கையை மேம்படுத்தியது. இந்த நிலையில், இந்தாண்டு இறுதியில் குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் வருவதை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரம் கட்டி வருகிறது.
அதுமட்டுமில்லாமல் டெல்லியை தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, தற்போது குஜராத் மாநிலத்திலும் வெற்றி பெற கவனம் செலுத்தி வருகின்றது. இதனால் குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரவிந்த் கெஜ்ரிவால் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இன்று சூரத்திற்கு பயணம் மேற்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குறுதியை வெளியிட்டார்.
சூரத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் அனைத்து வீடுகளுக்கும் மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். மாநிலத்தின் அனைத்து நகரங்கள், கிராமங்களிலும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையில் நிலுவையில் உள்ள அனைத்து மின் கட்டண தொகை தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்.
மேலும், எங்கள் ஆட்சியில் தவறு கண்டறிந்தால், அடுத்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் தெரிவித்தார். பாஜக, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி மட்டும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளது. குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி மும்முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.