#JustNow: எதிர்ப்புகளுக்கு மத்தியில் “அக்னிபத் திட்டத்தின் வயது வரம்பு” உயர்வு!
நாடு முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அக்னிபத் திட்டத்தின் வயது வரம்பை உயர்த்திய மத்திய அரசு.
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 45 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்பட உள்ள நிலையில், இதற்கு வயது வரம்பு 17.5 – 21 வயது வரை இருக்கும் என நிர்ணயிக்கப்பட்டது.
இதனிடையே, இத்திட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களிலும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், பீகார், உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலைகளில் டயர்களை கொளுத்தியும், பேருந்துகளை அடித்து நொறுக்கியும், ரயில்களுக்கு தீ வைப்பு என இளைஞர்கள் ஆவேச நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று வருவதால்ம், நாடு முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்ப்புகளுக்கு மத்தியில் அக்னிபத் திட்டத்தின் வயது வரம்பை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. நாடு தழுவிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆயுதப் படைகளுக்கான 2022 ஆம் ஆண்டிற்கான ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான அதிகபட்ச வயது வரம்பு 21-இல் இருந்து 23-ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ராணுவத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆள்சேர்ப்பு எதுவும் நடைபெறாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக ஒருபக்கம் இளைஞர்கள் மத்தியில் போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில், மறுபக்கம் இது மத்திய அரசின் மிகவும் நல்ல முயற்சியாகும், இதன் கீழ் இளைய தலைமுறையினர் நீண்ட கால பலன்களுடன் குறுகிய காலத்திற்கு பாதுகாப்பு படைகளில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்படுகிறது.