ஜூன் 7 ‘NDA’ கூட்டம்.. 3 ஆவது முறையாக பிரதமராகும் மோடி?
டெல்லி : மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி, தற்போது நாட்டில் பரபரப்பான அரசியல் களத்தை உருவாகியுள்ளது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருகின்றன.
இந்த வேளையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில், மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் ஜூன் 7ஆம் தேதி டெல்லியில் கூடவிருக்கின்றனர். அந்த கூட்டத்தில், நரேந்திர மோடி மக்களவைக் குழு தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மோடி 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, சனிக்கிழமை (ஜூன் 8) இந்த பதவியேற்பு நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
மீண்டும் பதவியேற்கும் வகையில், மோடி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவரது இல்லத்தில் சந்தித்த மோடி தனது ராஜினாமா கடிதத்தினை வழங்கினார்.
இன்று மாலை நடைபெறவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்குப் பின், மீண்டும் பிரதமராக பதவியேற்க மோடி உரிமை கோரவுள்ளார். திரௌபதி முர்மு ஒப்புதல் கிடைத்தவுடன் பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.