பத்திரிக்கையாளர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படவேண்டும் – ஒடிசா முதல்வர்!
அங்கீகாரம் பெற்ற அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிக அளவில் பரவி வருகிறது. குறிப்பாக கொரோனா இரண்டாம் அலையால் நாடு முழுவதிலும் தினமும் புதிதாக லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படுவதுடன், ஆயிரக்கணக்கானோர் தினமும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், ஒடிசாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. தினமும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் மற்ற மாநிலங்களை போலவே ஒடிசா மாநிலத்திலும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு கொண்டிருக்கிறது. தற்பொழுது இது குறித்து தெரிவித்துள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள், மாநிலத்தில் பணிபுரியக்கூடிய ஊடகவியலாளர்கள் அனைவரும் தொற்று நோயின் தாக்கம் அதிகம் இருந்தாலும் தங்கள் கடமையை சரிவர செய்து வருவதாகவும், பத்திரிகையாளர்கள் அனைவரும் போர்வீரர்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அங்கீகாரம் பெற்ற அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் அறிவித்துள்ளார்.