I.N.D.I.A கூட்டணியில் நிதிஷ் குமாருக்கு பிரதமர் பதவியா.? JDU தலைவர் விளக்கம்.!
டெல்லி: நிதிஷ் குமாருக்கு பிரதமர் பதவி வழங்குவதாக எதிர்க்கட்சிகள் கூறியதாக JDU செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி கூறியுள்ளார்.
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி அதன் பரபரப்புகள் இன்னும் நீண்டு கொண்டு இருக்கிறது. இரண்டு முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த பாஜக இந்த முறை கூட்டணிகளை ஒன்றிணைந்து NDA கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளது. இந்த கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், சந்திரபாபு நாயுடுவின் JDU கட்சியும் மிக முக்கிய பங்காற்றுகின்றன.
தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததை குறிப்பிட்டு NDA கூட்டணியில் உள்ள கட்சிகள் I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவு தரவேண்டும் என I.N.D.I.A கூட்டணியில் உள்ள சில அரசியல் தலைவர்களே கூறினர்.
இந்த அதிகாரபூர்வமற்ற பேச்சுக்கள் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய JDU செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி, எதிர்க்கட்சி கூட்டணி (I.N.D.I.A) நிதிஷ்குமாருக்கு பிரதமர் பதவியே கொடுக்கிறோம் என்று கூறினார்கள். நாங்கள் அதனை நிராகரித்துவிட்டோம்.
I.N.D.I.A கூட்டணிக்கு திரும்பும் பேச்சுக்கே இடமில்லை. NDA கூட்டணிக் கட்சியான பாஜகவில் இருந்து எங்களுக்கு அதிக மரியாதை கிடைத்து வருகிறது. நாங்கள் இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மதிப்புமிக்க கட்சியாக இருக்கிறோம். அவர்கள் நிதீஷ் குமாரை I.N.D.I.A கூட்டணியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக மாற்ற மறுத்துவிட்டார்கள். இப்போது நிதிஷை பிரதமராக்க முன்வருகிறார்களா.? நரேந்திர மோடியின் ஆட்சியை வலுப்படுத்துவதே எங்கள் பிரதான நோக்கம் என JDU செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி கூறியுள்ளார்.