6 ஆண்டுகள் நிறைவடைந்த ‘ஜன்தன் யோஜனா’ திட்டம்.! நன்றி தெரிவித்த பிரதமர் மோடி
ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கி 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பிரதமர் மோடி அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த போது வங்கி கணக்கு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு வங்கி கணக்கு உருவாக்கும் திட்டமான ‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தை அமல்படுத்தியிருந்தார். இதன் மூலம் பல கோடிக்கணக்கான மக்கள் வங்கி கணக்குகள் தொடங்கியதுடன், அவர்களுக்கு செல்ல வேண்டிய அரசு மானியங்களும் இந்த வங்கி கணக்கு வாயிலாக செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் இந்த திட்டம் தொடங்கி நேற்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அவரது பதிவில், 6 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் தொடங்கப்பட்ட ‘பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா’ திட்டம் ஏராளமான வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு அடித்தளமாக இருந்தது என்றும், இதன் மூலம் கோடிக்கணக்கானோர் பயன்பெற்று வருவதாகவும், குறிப்பாக கிராமத்தில் வசிக்கும் மக்களும் , பெண்களே இந்த திட்டம் மூலம் பயன்பெற்றதாகவும் கூறியுள்ளார். ஏராளமான மக்களின் எதிர்காலத்தை பாதுகாப்பாக மாற்றிய ஜன்தன் யோஜனா திட்டத்திற்கு நன்றி என்றும், இந்த திட்டத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.