ராணுவ முகாம் மீது ஜம்முவில் தற்கொலைப்படைத் தாக்குதல்!

Default Image

ராணுவ முகாம் மீது ஜம்மு-காஷ்மீரில்  தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் இருவர் வீரமரணம் அடைந்தனர். ஒரு தீவிரவாதியை சுட்டுக்கொன்றுள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது.

ஜம்முவில் உள்ள சஞ்சுவான் ராணுவ முகாமிற்குள் சனிக்கிழமை அதிகாலை நான்கே முக்கால் மணிக்கு நுழைந்த தற்கொலைப்படைத் தீவிரவாதிகள், திடீர் தாக்குதல் நடத்தினர். அதிகாலையில் நடத்தப்பட்ட தாக்குதலால் நிலைகுலைந்த ராணுவ வீரர்கள், பின்னர் சுதாரித்துக் கொண்டு தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, இருதரப்பினருக்கும் கடும் சண்டை நடைபெற்றது.

இதில், இளநிலை ராணுவ அதிகாரிகளான சுபேதார் மகன்லால் ((Subedar Maganlal)), சுபேதார் முகமது அஷ்ரஃப் (Subedar Mohammed Ashraf) ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். மேலும் 4 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து, ராணுவ முகாமில் உள்ள கட்டிடங்களுக்குள் பதுங்கிக் கொண்ட தீவிரவாதிகளை வேட்டையாட கூடுதல் படை வரவழைக்கப்பட்டு, தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. அதிகாலை முதல் நடைபெற்ற சண்டையில், பிற்பகல் 3 மணியளவில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், மேலும் 2 தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்றும் ராணுவத்தினர் தெரிவித்தனர்.

தீவிரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிக்கு அருகில் உள்ள கட்டிடங்களில் ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினர் சிலர் சிக்கியுள்ளதாகவும், பிணைக்கைதிகளாக யாரும் பிடிக்கப்படவில்லை என்றும் ராணுவத்தினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

கூடுதல் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக மிகவும் எச்சரிக்கையுடன் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக கூறியுள்ள ராணுவத்தினர், ஜெய்ஸ் இ மொகம்மது தீவிரவாதிகளின் அப்சல் குரு படைப்பிரிவே இந்த தாக்குதலுக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற தாக்குதல் குற்றத்துக்காக 2013ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு வெள்ளிக்கிழமை நினைவு நாள் என்பதால், எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கையுடன் இருந்த நிலையில், ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்