ஜம்மு காஷ்மீர் கிஷ்த்வார் வெள்ளம் : 6 பேர் உயிரிழப்பு, 40 பேர் மாயம்!
ஜம்மு காஷ்மீர் கிஷ்த்வார் பகுதியில் ஏற்பட்ட கனமழை வெள்ளம் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள ஹென்சார் கிராமத்தில் நேற்று அதிகாலை திடீரென கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு மேகமூட்டமாக காணப்பட்டதால், வெள்ளத்தில் 40க்கு மேற்பட்ட மக்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். மேலும், இந்த வெள்ளத்தில் 6 பேர் உயிரிழந்து, சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலைகள், பாலங்கள் அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கு மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்திய விமானப்படை அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், இது குறித்து கூறிய ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் அவர்கள், கிஷ்த்வார் மாவட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசி வருவதாகவும், ராணுவம் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.