பிரதமரிடம் இருந்து இது வந்திருக்க கூடாது – கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி!
தமிழகம்,கேரளா,தெலுங்கானா,மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைக்காததன் காரணமாகவே பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்துள்ளது என்று நேற்று முன்தினம் நடைபெற்ற அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார்.
பெட்ரோல் 200%;டீசல் 500%:
இதனையடுத்து,தமிழக நிதியமைச்சர் பிடிஆர்,கடந்த 8 ஆண்டுகளில் கலால் வரியானது பெட்ரோல் மீது சுமார் 200% அளவுக்கும்,டீசல் மீதான கலால் வரி 500% அளவுக்கும் மத்திய அரசால் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டி,கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்ததுபோல வரியை குறைக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பதிலடி கொடுத்தார்.
முதல்வர் பதிலடி:
கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்தபோது,அதற்கு ஏற்றாற்போல் பெட்ரோல்,டீசல் விலையை குறைக்காமல் எண்ணெய் வீழ்ச்சியால் கிடைத்த முழு உபரி வருவாயையும் மத்திய அரசு தனதாக்கி கொண்டு விட்டு,தற்போது மாநிலங்களை பிரதமர் குறை கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.
கேரள அரசை விமர்சிக்க கூடாது:
இந்நிலையில்,கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை 14 மடங்கு மத்திய அரசு உயர்த்தியது.ஆனால்,கடந்த ஆறு ஆண்டுகளில் ஒருமுறை கூட பெட்ரோலியப் பொருட்கள் மீதான விற்பனை வரியை உயர்த்தாத கேரள அரசை விமர்சிக்க கூடாது என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
ஒரு முறை கூட உயர்த்தவில்லை:
கொரோனா மறுஆய்வுக் கூட்டத்தின் போது,பிரதமர் மோடி அவர்கள் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களின் பெயரைக் குறிப்பிட்டு,அந்த மாநிலங்கள் பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரியைக் குறைக்கவில்லை என்று கூறினார்.மேலும்,அவர் கூட்டுறவு கூட்டாட்சி முறையையும் குறிப்பிட்டார்.கடந்த ஆறு ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை ஒருமுறை கூட கேரளா உயர்த்தவில்லை.
அதேசமயம்,கடந்த 2014-ம் ஆண்டு முதல் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை 14 மடங்கு உயர்த்திய மத்திய அரசு அதில் 4 மடங்கு மட்டுமே குறைத்துள்ளது.ஆனால்,பெட்ரோல்,டீசல் பொருட்கள் மீதான விலையை மத்திய அரசு உயர்த்தியிருப்பது,மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய அடிப்படை கலால் வரியில் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பிரதமரிடம் இருந்து இது வந்திருக்கக் கூடாது:
குறிப்பாக,2014 ஆம் ஆண்டு பெட்ரோல் மீதான மொத்த கலால் வரி ரூ.9.48 ஆக இருந்தது.ஆனால்,அவை படிப்படியாக ரூ.32.98 ஆக உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது ரூ.27.90 ஆக உள்ளது.அதைப்போல,டீசல் மீதான கலால் வரி ரூ.3.56-இல் இருந்து ரூ.31.83 ஆக உயர்த்தப்பட்டு தற்போது ரூ.21.80 ஆக உள்ளது.
எனவே,மத்திய அரசு 14 முறை வரியை உயர்த்தியும்,4 முறை மட்டும் வரியைக் குறைத்தாலும் இதுவரை உயர்த்தாத கேரளா போன்ற மாநிலங்களை விமர்சிப்பது வருத்தமளிக்கிறது.சமூக நலச் செலவுகளில் சிங்கப் பங்கை ஏற்க வேண்டிய மாநிலங்களின் தற்போதைய நிதி நிலைமையை நன்கு அறிந்த பிரதமரிடம் இருந்து இது வந்திருக்கக் கூடாது.
இதற்கு மத்திய அரசே பொறுப்பு:
நாட்டின் விலைவாசி உயர்வுக்கான பொறுப்பு,நிதி நிர்வாகத்தை பொறுப்பேற்றுள்ள மத்திய அரசின் மீது வராமல்,மாநிலங்கள் மீது விழுகிறது என்பதை உணர்த்தும் முயற்சி,கூட்டாட்சி அமைப்பில் நடந்திருக்கக் கூடாது.சாமானியர்களின் வாழ்க்கையைச் சிரமப்படுத்தக் கூடாது.இதனை தவிர்க்க விரும்பினால் அதிகப்படியான வரி உயர்வை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்.மேலும்,தேசிய நலன் கருதி, மத்திய அரசு உரிய கொள்கைகள் மூலம், தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் படும் இன்னல்களை, மாநிலங்களை நியாயமற்ற முறையில் குற்றம் சாட்டுவதன் மூலம் போக்க முடியாது”,என்று தெரிவித்துள்ளார்.
Unfortunate that Kerala is criticised despite not raising fuel taxes since 2016. Centre has done so 14 times since 2014. People’s sufferings caused by spiraling fuel prices can’t be alleviated by unreasonably blaming States. It isn’t in tune with Cooperative Federalism’s spirit. pic.twitter.com/EGposuuIE1
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) April 28, 2022