அக்னி வீரர்களுக்கு திருமண வரன்கள் கிடைப்பது மிகவும் கடினம் – மேகாலாயா ஆளுநர்
நான்கு ஆண்டுகள் பணி முடித்து ஓய்வுதியம் இன்றி வீடு திரும்பும் அக்னி வீரர்களுக்கு திருமண வரன்கள் கிடைப்பது மிகவும் கடினமான ஒன்று என மேகாலயா ஆளுநர் பேட்டி.
முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் மத்திய அரசு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 17.5 அதிகபட்சமாக 23-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அக்னிபாத் ஒரு தவறான திட்டம். இராணுவத்தின் கௌரவத்திற்கு எதிரானது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் ராணுவத்தின் மதிப்பு குறைந்துவிடும். நான்கு ஆண்டுகள் பணி முடித்து ஓய்வுதியம் இன்றி வீடு திரும்பும் அக்னி வீரர்களுக்கு திருமண வரன்கள் கிடைப்பது மிகவும் கடினமான ஒன்று. இதனால் அக்னிபத் திட்டம் எதிர்கால வீரர்களுக்கு எதிரானது என்று அவர் தெரிவித்துள்ளதோடு, இத்திட்டத்தை மத்திய அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.