வெளிநாடுகளிடம் உதவிகளை பெற்றுக்கொண்டு மத்திய அரசு மார்தட்டிக்கொள்வது வேதனை – ராகுல்காந்தி
கொரோனாவை கட்டுப்படுத்த வெளிநாடுகளிலிருந்து உதவிகளை பெற்றுள்ளது மத்திய அரசு என ராகுல்காந்தி விமர்சனம்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக மோசமாக தாக்கி வருகிறது. தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பால், நோயாளிகள் மருத்துவமனைகளை நாடுகின்றனர். ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, தடுப்பூசி மற்றும் படுக்கை வசதி என பல இடங்களில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் நோயாளிகள் தொடர்ந்த உயிரிழந்து கொண்டியிருக்கின்றனர்.
இந்தியாவில் நிலவி வரும் தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து மருத்துவ உதவியை பெற்று வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் செயல்பாட்டை விமர்சித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில், மத்திய அரசு தனது பணியை முறையாக செய்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. கொரோனாவை கட்டுப்படுத்த வெளிநாடுகளிலிருந்து உதவிகளை பெற்றுள்ளது மத்திய அரசு. வெளிநாடுகளிடம் உதவிகளை பெற்றுக்கொண்டு மத்திய அரசு மார்தட்டிக்கொள்வது வேதனை அளிக்கிறது என கூறியுள்ளார்.
இதற்குமுன்பு சென்ட்ரல் விஸ்டா திட்டம் ஒரு கிரிமினல் விரயம். புதிய வீட்டைப் பெறுவதற்காக உங்கள் கண்மூடித்தனமான அகங்காரத்துக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள் என்றும் மக்களின் உயிருக்கும், வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் அளியுங்கள் எனவும் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் வைத்து வருகிறார்.
மேலும், மத்திய அரசு தன்னுடைய விஸ்டா திட்டத்தை ஒதுக்கி வைத்து மக்களின் நலன் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் நாட்டில் அத்தியாவசியமான மருத்துவக் கட்டமைப்புகளை அதிகமாக ஏற்படுத்தி, மக்களின் உயிர்களைக் காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
GOI’s repeated chest-thumping at receiving foreign aid is pathetic.
Had GOI done its job, it wouldn’t have come to this.
— Rahul Gandhi (@RahulGandhi) May 10, 2021