தமிழக முதல்வர் அழைப்பு விடுத்தும் குடியரசு தலைவர் ஏன் பங்கேற்கவில்லை.? விளக்கம் கொடுத்த அலுவலகம்.!

குடியரசு தலைவருக்கு ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் இருந்ததால், சென்னை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என விளக்கம் வெளியாகியுள்ளது.
நேற்று சென்னை, கிண்டியில் தமிழக அரசால் கட்டிமுடிக்கப்பட்ட கலைஞர் பல்நோக்கு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழா முதலில் ஜூன் 3ஆம் தேதி கலைஞர் கருணாநிதி பிறந்தநாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அப்போது குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது, குடியரசு தலைவர் வருகையை ஒட்டி ஜூன் 15ஆம் தேதிக்கு விழா ஒத்திவைக்கப்பட்டது. இருந்தும் நேற்று விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொள்ளவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசும்போது கூட குடியரசு தலைவரை சிலர் வரவிடாமல் தடுத்துவிட்டார் என விமர்சனம் செய்து இருந்தார்.
இந்த விவகாரம் குறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏன் சென்னைக்கு வரவில்லை என குடியரசு தலைவர் அலுவலகம் விளக்கம் கூறியுள்ளது. அழைப்பு விடுப்பதற்கு முன்னரே குடியரசு தலைவர் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சிகள் இறுதி செய்யப்பட்ட காரணத்தால் சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.