புத்தாண்டில் இஸ்ரோ விண்ணில் செலுத்தும் PSLVC – 58 ராக்கெட்..!
நாளை அதாவது ஜனவரி 1 ஆம் தேதி 2024 ஆம் ஆண்டின் முதல் நாளாகும். இதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆண்டின் முதல் நாளிலேயே பிஎஸ்எல்வி சி-58 என்ற ராக்கெட் விண்ணில் செலுத்துகிறது. அந்த வகையில் நாளை பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் “எக்ஸ்போசாட்” என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. கேரளா பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட வெசாட்செயற்கைகக்கோளும் ஏவப்படுகிறது.
இந்த செயற்கைகோள் விண்வெளியில் உள்ள கருந்துளைகள் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்களை குறித்து ஆய்வு செய்ய உள்ளது. நாளை (திங்கட்கிழமை) பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் ஏவுவதற்கு அனைத்தும் தயாராக உள்ளது. இதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் ஞாயிற்றுக்கிழமை (இன்று ) காலை 8.10 மணிக்கு தொடங்கியது. நாளை காலை 9.10 மணிக்கு பிஎஸ்எல்வி சி-58 விண்ணில் ஏவப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படுகிறது.
புவியின் மேற்பரப்பில் இருந்து 650 கிமீ உயரத்தில் உள்ள வட்டப்பாதையில் செயற்கைகோள்களை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் இரண்டு முக்கிய பேலோடுகளைக் கொண்டிருக்கும். ஒன்று பெங்களூருவை தளமாகக் கொண்ட ராமன் ஆராய்ச்சி நிறுவனம் (RRI) மற்றும் மற்றொன்று ISROவின் U R ராவ் செயற்கைக்கோள் மையம் (URSC), ISRO ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது.