அடுத்த லெவலுக்கு சென்ற ‘இஸ்ரோ’ ! சந்திராயன்-4 திட்டதிற்கு அமைச்சரவை ஒப்புதல்!
நிலவிற்கு சென்று மாதிரிகளை சேகரித்து மீண்டும் பூமிக்குத் திரும்பும் சந்திரயான்-4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி : விண்வெளி துறையில் இந்தியா மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. சந்திரயான் 3-ஐ தொடர்ந்து, இஸ்ரோ நிலவில் ஒரு பிரம்மாண்ட திட்டத்தை மேற்கொள்ள சந்திரயான்-4 விண்கலம் மூலம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய பின், பூமிக்கு மீண்டும் வருவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், நிரூபிப்பதற்காகவும் சந்திரயான்-4 என பெயரிடப்பட்ட இரண்டு முக்கிய விண்வெளிப் பயணங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
நிலவில் இருந்து பாறைகள் மற்றும் மண்ணை பூமிக்கு கொண்டு வரும் சந்திரயான் 4 திட்டம் மற்றும் வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் திட்டத்திற்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதாவது, சந்திரயான் 4 திட்டத்திற்கும், சுக்ரயான் 1 எனும் வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் (VOM) திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, சந்திரயான் விரிவாக்கத்திற்கு ரூ.2,104 கோடியும், 2028ல் வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் (VOM) திட்டத்திற்கு ரூ.1,236 கோடி நிதி ஒதுக்கியுள்ளது
நிலவில் இருந்து பாறைகள், மண்ணை பூமிக்கு கொண்டுவந்து ஆராய்ச்சி செய்ய சந்திரயான் 4 செயல்படுத்தப்படுகிறது. விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை சந்திரயான் 4 விண்கலம் மூலம் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
அது மட்டுமின்றி, விண்வெளியில் இந்தியாவின் முதல் ஆய்வு மையம் அமைப்பதற்கும், 2040-க்குள் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் ககன்யான் விரிவாக்க திட்டதிற்கும் ரூ.20,193 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.