விண்ணில் பாய்ந்த ஸ்பேடெக்ஸ் செயற்கைகோள்கள் என்ன செய்யும்? இஸ்ரோ விளக்கம்!
விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி60 விண்கலத்தில் இருந்த ஸ்பேடெக்ஸ் செயற்கைகோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா : விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவும், விண்வெளியில் இரு செயற்கைகோள்களை இணைக்கும் (Space Docking Experiment) முயற்சிக்காக நேற்று இரவு 10 மணிக்கு ஆந்திரபிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் ஏவப்பட்டது.
சதீஸ் தவான் 2வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து SpaDeX A மற்றும் SpaDeX B என்ற இரண்டு செயற்கைகோள்களை சுமந்து விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி ராக்கெட். விண்ணில் ஏவப்பட்ட சில நேரத்தில் இரண்டு செயற்கைகோள்களும் விண்ணில் புவி வட்டப்பாதையில் 476 கிமீ தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டது என இஸ்ரோ அறிவித்தது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறுகையில், இந்த Docking தொழில்நுட்ப சோதனையானது சந்திராயன் 4 செயற்கைக்கோளுக்காக தேவைப்படுகிறது. அதே போல புவி சுற்றுவட்ட பாதையில் இருக்கும் செயற்கைகோள்களுக்கும் இந்த Docking தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. தற்போது ஏவப்பட்டுள்ள ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் பி செயற்கைகோள்கள் ஜனவரி 7ஆம் தேதி Docking செயல்முறையை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.
Space Docking சோதனை என்பது, இரு செயற்கைக்கோளை ஒன்றாக இணைத்து இங்கிருந்த தகவல்களை, தேவைகளை, விண்வெளி வீரர்களை கூட மற்ற விண்வெளி களத்திற்கு அனுப்பும் செயல்முறையாகும். இந்த செயல்முறையில், விண்வெளியில் இருந்து வேறு எதுவும் செயற்கைக்கோளுக்குள் புகாமல் இருக்க வேண்டும். அதே போல உள்ளே இருந்து வெளியில் எதுவும் செல்லாமல் பத்திரமாக Docking சோதனை செய்யப்பட வேண்டும். இந்த செயல்முறையை ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளன.