இந்திய ராக்கெட்., ஐரோப்பிய செயற்கைகோள்! கம்பீரமாய் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ!
ஐரோப்பிய செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவி, அதனை வெற்றிகரமாக புவி நீள்வட்ட பாதையில் இஸ்ரோ நிலைநிறுத்தி உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா : நேற்று மாலை 4 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ராக்கெட் ஏவுளத்தில் இருந்து ஐரோப்பிய செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்திய அரசின் விண்வெளி மையமான இஸ்ரோ (ISRO), NSIL மூலம் வணிக நோக்கத்தில் அவ்வப்போது அயல்நாட்டு செயற்கைகோள்களை நமது விண்வெளி தளத்தில் இருந்து ஏவுவது வழக்கம். அதே போல சூரியனை ஆய்வு செய்யும் நோக்கில் ஐரோப்பிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, ப்ரோபா 3, கரோனா கிராப் எனும் 550 கிலோ எடை கொண்ட இரண்டு செயற்கைகோள்களை இந்தியாவின் பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் மூலம் நேற்று மாலை 4.06 மணியளவில் சதீஸ் தவான் ராக்கெட் ஏவுளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த ராக்கெட் ஏவிய 18வது நிமிடத்திலேயே ஐரோப்பிய செயற்கைகோள்கள் புவி நீள் வட்டப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தபட்டது என இஸ்ரோ தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த செயற்கைகோள்கள், சூரியனின் மேற்புற வளிமண்டல பகுதியான கரோனாவை ஆய்வு செய்து அதன் தகவல்களை பூமிக்கு அனுப்பும் என கூறப்படுகிறது. அயல்நாட்டு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி உலக அரங்கில் இஸ்ரேல் மீண்டும் வெற்றிகரமான ராக்கெட் ஏவுளதாளமாக பறைசாற்றியுள்ளது.