இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்..இந்தியா அமைதிக்கான பாதையை வழிநடத்த வேண்டும்.! ஆர்எஸ்எஸ் தலைவர்
விஜயதசமியை முன்னிட்டு நாக்பூரில் உள்ள ரெஷிம்பாக் மைதானத்தில் ராஸ்திரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) அமைப்பினர் நடத்திய தசரா நிகழ்வில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில் உலக நாடுகள் இந்தியாவை முன்மாதிரியாகக் கொண்டு, அமைதிக்கான புதிய பாதையைக் காட்ட வேண்டும். இந்தியா அமைதிக்கானப் பாதையைக் காட்டவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், ” ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் அல்லது இஸ்ரேல் மற்றும் காஸா பகுதியில் நடைபெற்றுவரும் மோதல்களுக்கு எந்தத் தீர்வும் எடுக்கப்படவில்லை. இது மக்களின் நலன் மற்றும் தீவிரவாதத்தின் மோதல் காரணமாக நிகழ்கிறது என்ற மழுப்பல்கள் மட்டுமே உள்ளது. இவ்வாறு இயற்கையோடு ஒத்துப்போகாத வாழ்க்கை முறை, உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகளை உருவாக்குகிறது.” என்று பகவத் கூறினார்.
தொடர்ந்து, “பயங்கரவாதம் மற்றும் சர்வாதிகாரம் ஆகியவை உலகில் அழிவை ஏற்படுத்தும் நோக்கில் சுதந்திரமாக இயங்கி வருகின்றன. உலகத்தால் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாது என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்துவிட்டது. எனவே உலகம் தனது அமைதி மற்றும் செழுமைக்கான ஒரு புதிய பாதையில் வழிநடத்திச் செல்ல இந்தியாவை எதிர்பார்க்கிறது.” என்று கூறினார்.
இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய போர், இன்று வரை 18 வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில், இரு தரப்பிலிருந்தும் குழந்தைகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதில் பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில், குறைந்தது 4,137 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 12,065 மக்கள் காயமடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.