“சுல்லி டீல்ஸ்” எனும் செயலி மூலமாக விற்பனைக்காக பட்டியலிடப்பட்ட இஸ்லாமிய பெண்கள்!
சுல்லி டீல்ஸ் எனும் செயலி மூலமாக இஸ்லாமிய பெண்கள் பெயர் மற்றும் புகைப்படத்துடன் விற்பனைக்காக பட்டியலிடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
சமீபத்தில் உருவாக்கப்பட்ட சுல்லி டீல்ஸ் எனும் செயலியில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண்கள் பலர் பெயர் மற்றும் புகைப்படத்துடன் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. இஸ்லாமிய வழக்கத்தின் படி சுல்லி என்பது பெண்களை இழிவாக அழைக்கக்கூடிய சொல் எனக் கூறப்படுகின்ற நிலையில் இந்த சுல்லி எனும் வார்த்தையை பயன்படுத்தி இஸ்லாமிய பெண்களை விற்பனை செய்வதற்காக பட்டியலிட்டுள்ளனர்.
இந்தப் பட்டியலில் இடம் பெற்ற பெண்களில் பெரும்பாலும் சமூக ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், நடிகைகள் மற்றும் பத்திரிக்கையாளர் தான் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த செயலியில் 90க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்களின் தகவல்கள் இருந்ததாகவும், ஆனால் இது குறித்த செய்திகள் வெளியானதும் உடனடியாக இந்த செயலியை மத்திய அரசு பிளாக் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த செயலியில் பட்டியலிடப்பட்டு வந்த பெண்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் எனவும், மீதமுள்ளவர்கள் பாகிஸ்தான் மற்றும் வேறு நாட்டைச் சேர்ந்த பெண்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசு பொருளாக மாறியுள்ள நிலையில் இதற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சசி தாரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதாவது இது போன்ற செயலில் ஈடுபடக் கூடியவர்களை கண்டுபிடித்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்நிலையில், இது குறித்து டெல்லி காவல்துறையினர் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதுடன், மேற்கொண்டு இது குறித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். மேலும், இந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் டுவிட்டரில் இருந்து அனுமதியின்றி எடுக்கப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.