இந்தியாவில் வோடஃபோன் நிறுவனம் தனது சேவையை நிறுத்த போகிறதா?
இந்தியாவில் செயல்பட்டுவரும் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று வோடஃபோன் நிறுவனம். இந்த நிறுவனம், ஐடியா நிறுவனத்துடன் இணைந்ததில், பெரிய அளவிலான நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாகவே இந்நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது.
இந்நிலையில், வோடஃபோன் நிறுவனம் இந்தியாவில் தனதுச் சேவையை நிறுத்த போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், உச்சநீதிமன்றம் அளித்த திருத்தப்பட்ட வருவாய் வழக்கின் தீர்ப்பின்படி வோடஃபோன் நிறுவனம் 28,309 கோடி ரூபாய் தொகையை மூன்று மாதத்திற்குள் அளிக்க வேண்டும். இது அவர்களுக்கு மேலும் நெருக்கடியாய் அமைந்துள்ளது.
ஏற்கனவே இந்நிறுவனம் சரிவை சந்தித்து வருகிற நிலையில், இந்த தொகையை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், வோடஃபோன் நிறுவனம் தனது சேவையை தொடர்வதில் சிக்கல் இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து வோடஃபோன் நிறுவனம் விரைவில் பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.