விபத்துக்கு இதுதான் காரணம்? ஆய்வறிக்கை தயார்! – வெளியான அதிர்ச்சி தகவல்!
குன்னுரில் அருகே ஏற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்து மோசமான வானிலையே காரணம் என தகவல்.
கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி குன்னுர் அருகே Mi-17V5 என்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படைத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த நிலையில், குரூப் கேப்டன் வருண் சிங் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு, விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உலகின் மிக அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதும், நாட்டின் முப்படைகளின் முதல் தலைமை தளபதி உயிரிழந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின் ஹெலிகாப்டர் விபத்து குறித்து முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், குன்னுரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து மோசமான வானிலையே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்த ஆய்வறிக்கை தயாரிப்புப் பணி நிறைவடைந்துவிட்டதாகவும், அது சட்டரீதியான தணிக்கைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதில், ஹெலிகாப்டர் நல்ல நிலையில் இருந்ததாகவும் CFIT எனப்படும் தொழில்நுட்ப குறியீடே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. அதாவது, CFIT என்பது மோசமான வானிலையால் முடிவெடுப்பதில் பைலட் அல்லது அவரது குழுவினருக்கு தடுமாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேகக் கூட்டத்தில் நுழைந்ததால் இருளில் விமானியால் பாதையை கணிக்க முடியாமல் போயிருக்கலாம் என்றும் மன்வேந்தர சிங் குழு அறிக்கையை சட்டரீதியாக ஆய்வு செய்து விரைவில் தாக்கல் செய்யவுள்ளது. இதுதெடர்பான ஆய்வறிக்கை விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த முப்படைகளின் குழு ஹெலிகாப்டரின் கறுப்பு பெட்டியில் பதிவான தகவல்கள் உட்பட விபத்துக்கான காரணங்கள் குறித்த அனைத்தையும் ஆராய்ந்து அறிக்கை தயாரித்துள்ளது. மேலும், இந்த அறிக்கை அடுத்த வாரம் விமானப் படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரியிடம் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.