பிரதமர் வியாபாரியா அல்லது பிரதிநிதியா? – திரிணாமுல் காங்கிரஸ்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நாடாளுமன்ற மக்களவையில் காரசாரமாக நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய இந்தியா கூட்டணியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராய், மோடி அரசை எதிர்த்து பேசினால் அமலாக்கத்துறை வீட்டுக்கு வருமென நாடாளுமன்றத்திலேயே மத்திய அமைச்சர் கூறுகிறார். மேற்குவங்க மாநிலத்தை கண்காணிக்க பல்வேறு ஆணையங்களை அனுப்புகிறது மத்திய அரசு.
ஆனால், மத்திய அரசு மணிப்பூருக்கு எந்த ஆணையத்தையும் அனுப்பவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பேசிய பாஜக உறுப்பினர் நிஷிகாந்த் துபே மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எனவே, மணிப்பூர் அரசை உடனடியாக கலைத்துவிட்டு, குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். பிரதமர் மோடி என்ன உலகத்தை சுற்றி வரும் தூதுவரா அல்லது விற்பனை பிரதிநிதியா? எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், அரசு வழி தவறுகிறபோது நாட்டின் உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்கிறது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஆளுநர்களை அனுப்பி தொல்லை அளிக்கிறது மத்திய அரசு. எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைத்தே அமலாக்கத்துறை, சிபிஐ ஏவப்படுகிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்ற பாஜகவின் வாக்குறுதியை தற்போதும் செயல்படுத்தவில்லை. இதனால் விவசாயிகள் தற்போதும் தற்கொலை செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். மறுபக்கம் விமான நிலையம், சிமெண்ட் ஆலைகள் உள்பட பல்வேறு நிறுவனங்களை மிரட்டி வாங்குகிறது அதானி குழுமம்.
டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களைவிட அதானி நிறுவனம் வேகமாக வளர்கிறது. இரண்டு, மூன்று தொழில் குழுமம் மட்டுமே மத்திய அரசிடம் இருந்து பயன்படுகின்றன. மேலும், வாக்குறுதிப்படி, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திறன் மோடி அரசுக்கு இல்லை. கொரோனா காலத்தில் ஒரு கோடி பேர் வேலையை இழந்தனர். இதுபோன்று ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வழங்குவோம் என கூறினார், ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை.
லடாக், டோக்லாம் எல்லைகளில் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமிக்கிறது. வந்தே பாரத் ரயில்களை அவசர கதியில் அறிமுகப்படுகிறது. ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறும் கருணை உள்ளம் கூட பிரதமரிடம் இல்லை. 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பிரதமர் மோடி அஞ்சுகிறார். மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறிவிட்டது என மத்திய அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராய் பேசினார்.