இஸ்ரேல் நிறுவனத்துடன் மோடி அரசு தொடர்பா? இல்லையா? – சுப்பிரமணியன் சுவாமி
தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்க வேண்டும்.
இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் பல்வேறு நாடுகளில் முக்கிய நபர்களின் செல்போன் உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், இதுகுறித்து, பிரான்ஸை சேர்ந்த Forbidden Stories என்ற ஊடக நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த THE WIRE மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வில், இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்திடம் வேவு பார்ப்பதற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை இந்தியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மெக்ஸிகோ, பஹ்ரைன், ஹங்கேரி, மொராக்கோ, ருவாண்டா, அஜர்பைஜான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தது என THE WIRE ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த பட்டியலில், இந்தியாவை சேர்ந்த 2 மத்திய அமைச்சர்கள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், 40-க்கும் அதிகமான பத்திரிக்கையாளர்களது எண்களும் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த குற்றசாட்டு தொடர்பாக விளக்கமளித்துள்ள மத்திய அரசு, தற்போது எழுந்துள்ள குற்றசாட்டு அரசின் நிறுவனங்களை களங்கப்படுத்தும் நோக்கில் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்க வேண்டும். இஸ்ரேல் நிறுவனத்துடன் மோடி அரசு தொடர்பா? இல்லையா? என்பது பற்றி கூற வேண்டும். ஒட்டுக்கேட்பு குறித்து விளக்கினால் நல்லது; இல்லாவிடில் வாட்டர்கேட் ஊழல் போல் தலைவலிதான்.’ என பதிவிட்டுள்ளார்.
It will be sensible if the Home Minister tells Parliament that Modi Government has nor had any involvement with the Israeli company which tapped and taped our telephones. Otherwise like Watergate truth will trickle out and hurt BJP by halal route.
— Subramanian Swamy (@Swamy39) July 19, 2021