மத்திய பிரதேசம் பெயரில் ஐபிஎல் அணி! மகளிருக்கு மாதம் ரூ.1,500 – காங்கிரஸ் வாக்குறுதி வெளியீடு!
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதியையும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் கவனம் வாந்தவையாக பார்க்கப்படுகிறது.
தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளர்கள் அறிவிப்பு, வாக்குறுதி உள்ளிட்டவை வெளியிட்டு வருகின்றனர். இந்த 5 மாநிலங்களில் மத்திய பிரதேசம் மாநில தேர்தல் குறிப்பாக பார்க்கப்படுகிறது. அதன்படி, மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 14ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு சட்டப்பேரவை தேர்தலுக்காக 64,532 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 5.06 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை டிச. 3ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மத்திய பிரதேசத்தில் இப்போது சவுஹான் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருக்கிறது. அங்கே கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலை எதிர்கொள்கிறது. இதனால் அங்கு ஆட்சியைக் கைப்பற்றுவதில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிடையே, 230 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி சமீபத்தில் அறிவித்தது.
இந்த சூழலில் தலைநகர் போபாலில் காங்கிரஸ் மாநில தலைவர் கமல்நாத் சட்டப்பேரவை தேர்தல் (வாக்குறுதி) அறிக்கையை இன்று வெளியிட்டார். இந்த தேர்தல் வாக்குறுதியில். மத்திய பிரதேசத்தின் பெயரில் தனி ஐபிஎல் அணி உருவாக்கப்படும். அனைத்து மக்களுக்கும் ரூ.25 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும். 27% ஓபிசி ஒதுக்கீடு, விவசாயிகளின் ரூ.2 லட்சத்துக்கு மேல் உள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய பிரதேசத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.5,00க்கு வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது, வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்பட பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளது. மொத்தம் 106 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையில், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் முதல் பெண்கள், பழங்குடியினர் மற்றும் ஓபிசிகள் வரை அனைத்து வகுப்புகள் மற்றும் பிரிவுகள் அடங்கிய தொடர் வாக்குறுதிகள் உள்ளன என்பது குறிப்பிடப்படுகிறது.