IPL பந்தய மோகம்.. கோடிக்கணக்கில் கடன்.! பறிபோன பெண்ணின் உயிர்…
IPL betting : கர்நாடகாவில் IPL பெட்டிங் காரணமாக அதிக கடன் ஏற்பட்டதால் பெண் தற்கொலை செய்துகொண்டார்.
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவின் ஹோசதுர்காவில் மாநில நீர்ப்பாசனத் துறையில் உதவிப் பொறியாளரான பணியாற்றி வருபவர் தர்ஷன் பாபு. இவருக்கும், ரஞ்சிதா (வயது 24) எனும் பெண்ணிற்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணமாகியுள்ளது.
தர்ஷன் பாபுவுக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபடும் பழக்கம் இருப்பது பின்னர் தான் ரஞ்சிதாவுக்கு தெரிய வந்துள்ளது. இந்த சூதாட்டத்தில் அதிக அளவில் ஈடுபட்டு சுமார் 1 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்றதாகவும், இவர்களுக்கு கடன்கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த தர்ஷன் மனைவி ரஞ்சிதா கடந்த மார்ச் 18ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். மேலும், தான் தற்கொலை செய்தது தொடர்பாக தற்கொலை கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார். அதில், தனது கணவர் வாங்கிய கடனை திருப்பி கேட்டு பலர் வீடு தேடிவந்து தொல்லை தருவதாகவும், இதனால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த தற்கொலை குறித்து ரஞ்சிதாவின் தந்தை வெங்கடேஷ் அளித்த புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ரஞ்சிதா தற்கொலை குறிப்பின்படி, 13 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 306இன் படி, தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுவரை, சிவு, கிரீஷ் மற்றும் வெங்கடேசன் ஆகிய மூன்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை 2020 முதல் 84 லட்சம் ரூபாய் வாங்கியதை கண்டுபிடித்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.