நதிகள் இணைப்பு வழக்கில் இடையீட்டு மனு – கர்நாடகா முடிவு..!
தென்னிந்திய நதிகளை இணைப்பு வழக்கில் தங்களையும் மனுதாரராக இணைக்க இடையீட்டு மனு தாக்கல் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரு குடிநீருக்காகவும், மின்சாரம் உற்பத்திக்காகவும் மேகதாதுவில் அணை கட்டுவதாக கர்நாடகா கூறுகிறது. ஆனால், அணை கட்ட கூடாது என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதை மீறி அணை கட்டியே தீருவோம் என கர்நாடகா அரசு உள்ளது.
இதற்கிடையில், இரண்டு நாள் பயணமாக நேற்று டில்லி சென்ற முதல்வர் பசவராஜ் பொம்மை ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார். மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி தரும் என பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
இந்நிலையில், தென்னிந்திய நதிகளை இணைக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தங்களையும் மனுதாரராக இணைக்க இடையீட்டு மனு தாக்கல் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.