அமித் ஷாவுடன் இணையமைச்சர் அஜய் மிஸ்ரா சந்திப்பு..!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா சந்தித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிக்கு அருகே மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பேரணியாக வந்து கொண்டிருந்தனர். அப்போது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷிற்கு பாதுகாப்பிற்காக உடன் சென்ற கார் விவசாயிகள் மீது மோதியதாக கூறப்படுகிறது.
கார் மோதியதில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்து தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, லக்கிம்பூர் வன்முறைக்கு பல தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா சந்தித்துள்ளார். தனது மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அமித் ஷாவை அஜய் மிஸ்ரா சந்தித்துள்ளார். உத்திரபிரதேசத்தின் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது மீது காரை ஏற்றி கொன்றதாக ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் மீது ஆஷிஷ் மிஸ்ரா துப்பாக்கியால் சுட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.