சர்வதேச பயணிகள் விமானத்திற்கு ஆகஸ்ட் 31 நள்ளிரவு வரை தடை நீட்டிப்பு ..!
சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடையை ஆகஸ்ட் 31 நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகள் விமானங்கள் கொரோனா காரணமாக தடை செய்யப்பட்டன. அதன்பிறகு, சர்வதேச விமான போக்குவரத்திற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு அதற்கக்கான கால அவகாசம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விமான போக்குவரத்து அமைச்சகம் சர்வதேச விமானங்களுக்கான தடையை நீட்டித்துள்ளது. இப்போது இந்த தடை ஆகஸ்ட் 31 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கட்டுப்பாடுகளை அதிகரிப்பதோடு, சில வழித்தடங்களில் சர்வதேச விமானங்கள் அனுமதிப்படுகிறது என்றும் சர்வதேச சரக்கு விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடந்த ஆண்டு மே 25 ஆம் தேதி இந்தியாவில் உள்நாட்டு பயணிகள் விமானங்களை மீண்டும் தொடங்கியது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 57.25 லட்சம் பேர் விமானம் மூலம் நாட்டிற்குள் பயணம் செய்தனர். மே மாதத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து வீழ்ச்சியடைந்தது. கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை நாட்டையும் அதன் விமானத் துறையையும் கடுமையாக பாதித்தது.
ஜூன் மாதத்தில் சுமார் 31.13 லட்சம் உள்நாட்டு பயணிகள் விமானத்தில் பயணம் செய்தனர். இது மே மாதத்தில் பயணம் செய்த 21.15 லட்சத்தை விட 47 சதவீதம் அதிகமாகும் என சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.