கடும் உண்ணாவிரத போராட்டம்: விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் உடல்நிலை கடும் பாதிப்பு!
41வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் நிலையில், விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் உடல்நிலை மோசமடைந்துள்ளது.
பஞ்சாப் : மாநிலத்தின் முக்கிய விவசாயத் தலைவரான ஜக்ஜித் சிங் தல்லேவால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் அவருடைய உடல் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. 41வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அவர், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.
எதற்காக போராட்டம்?
ஜக்ஜித் சிங் தல்லேவால் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருவதற்கு முக்கிய காரணம் இந்திய அரசு 2020-ல் அறிமுகப்படுத்திய புதிய விவசாய சட்டங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து தான். வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்க வகை செய்யும் சட்டம் இயற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தங்கள் உரிமைகளைக் காப்பாற்றவும், விவசாயம் குறித்த தீர்மானங்களை மாற்றவும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதம் முதல் பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஜக்ஜித் சிங் தல்லேவால் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி முதல் விவசாயிகளுக்கான உரிமைகளை வென்று கொள்ளும் நோக்குடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து, அவர் 41வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. சிறுநீரக மற்றும் நுரையீரல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில், 2024 டிசம்பர் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம், பஞ்சாப் அரசுக்கு தல்லேவாலுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்க உத்தரவிட்டது.
ஜக்ஜித் சிங் உடல் நிலை
ஜக்ஜித் சிங் தல்லேவாலின் உடல் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. 41வது நாளாக அவர் உண்ணாவிரதம் தொடர்ந்துவரும் நிலையில், சிறுநீரகம் மற்றும் நுரையீரலில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் மருத்துவர் அவதார் சிங் தில்லான் கூறியதாவது ” கடும் பனி நிலவரம் காரணமாக தல்லேவாலுக்கு உரையாற்ற வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். ஆனால் அவர் அதனை மீறி 11 நிமிடங்கள் உரையாற்றினார்.
அதன் பிறகு, அவர் அவசரமாக கூடாரத்திற்கு அழைத்துவரப்பட்டு, தண்ணீர் கொடுக்கப்பட்டாலும், அதனை அவர் ஒத்துக்கொள்ளவில்லை. மேலும், உறங்க முடியாத நிலையில் இருந்த அவர், ரத்த அழுத்தம் 108/73 ஆக குறைந்துவிட்டது. சுவாச விகிதம் 17 ஆகவும், இதயத் துடிப்பு 73 ஆக உள்ளது” எனவும் தெரிவித்தார்.