இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரி ரத்து செய்யப்பட்டது – பிரதமர் மோடி விமர்சனம்!
PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1984-ம் ஆண்டு தனது தாயார் இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு, தனது சொத்துக்களை அரசுக்குப் போகாமல் காப்பாற்றுவதற்காக பரம்பரை வரியை ரத்து செய்தார். இப்போது காங்கிரஸ் மீண்டும் அந்த வரியைக் கொண்டுவர விரும்புகிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் செய்த பாவங்களைக் நன்றாக உற்று கவனியுங்கள். நான் ஒரு சுவாரஸ்யமான உண்மையை சொல்ல போகிறேன்.
“இந்திரா காந்தி இறந்தபோது, அவரது பாதி சொத்துக்கள் அரசாங்கத்திற்குச் செல்லும் என்று ஒரு சட்டம் இருந்தது. இவ்வாறு அரசாங்கத்திற்குப் பணம் போகாமல் இருக்க, ராஜீவ் காந்தி பரம்பரை வரியை ரத்து செய்தார்” என்று பிரதமர் குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் வெற்றி பெற்றால் மக்களின் சம்பாதிக்கும் சொத்துக்களில் பாதிக்கு மேல் பரம்பரை வரி மூலம் பறிக்கும் என்றும், மக்களின் சொத்துக்களை காங்கிரஸ் கொள்ளையடிக்கும் திட்டங்களில் இருந்து மக்களின் செல்வத்தைப் பாதுகாப்பதாக சபதம் செய்வதாக தெரிவித்தார்.
நான்கு தலைமுறைகள் தங்களுடைய சொத்துக்களை அனுபவித்து பலன் பெற்ற பிறகு, இப்போது மீண்டும் பரம்பரை சொத்து வரியை மீண்டும் கொண்டுவர காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால், இதுபோன்ற செயல்களை பாஜக அனுமதிக்காது என்று உறுதியளித்தார்.