இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் நந்தன் நிலேகனி தன் சொத்துக்களில் பாதியை அறக்கட்டளைக்கு வழங்கினார்..!
இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் நந்தன் நிலேகனி உள்பட 3 இந்திய வம்சாவளியினர் தங்களது ஆஸ்தியில் பாதியை ஏழை மக்களுக்கான பில்கேட்ஸ் அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளனர்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பில்கேட்ஸ் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகியோர் தங்களது சொத்துக்களில் பாதிக்கும் மேற்பட்ட பகுதியை பில் அன்டு மெலிண்டா கேட்ஸ் என்ற அறக்கட்டளையைத் தொடங்கி அதற்கு வழங்கினர்.
இதைத் தொடர்ந்து இந்தியா, கனடா, சவுதி அரேபிய நாடுகளைச் சேர்ந்த உலக பணக்காரர்கள் பலரும் இதே போன்று தங்களது சொத்துக்களில் பாதிக்கும் மேற்பட்ட பகுதியை வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் ஏழைகளுக்காகவும், இயற்கைப் பேரிடர், போர் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உதவிக்காகவும், சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களைவதற்காகவும் அந்த அறக்கட்டளைக்கு எழுதி வைத்தனர்.
அந்த வரிசையில் தற்போது இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் நந்தன் நிலேகனியும், அவரது மனைவி ரோஹினி நிலேகனியும், தங்கள் சொத்துகளை பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் சேவைகளுக்கு வழங்குவதாக பகவத் கீதையின் கருத்துக்களை மேற்கொள் காட்டி கடிதம் எழுதியுள்ளனர்.
இதே போன்று மேலும் சில இந்திய வம்சாவளி தம்பதிகளும் தங்களது சொத்துக்களை அந்த அறக்கட்டளைக்கு கொடையளிக்க முன்வந்துள்ளனர்.