‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
தாக்குதல் நடந்தபோது, பஹல்காம் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அந்த நேரத்தில் அப்பகுதிக்குச் செல்லவில்லை. இதனால் உயிரிழப்பினோம் என்று சுற்றுலா சென்ற மதுரை நபர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில் பரிதாபமாக 26க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்தனர், ஆனால் மதுரையைச் சேர்ந்த 68 தமிழர்கள், தாக்குதல் நடந்த பகுதிக்குச் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மதுரையைச் சேர்ந்த அந்த 68 பேர், சுற்றுலாவுக்காக காஷ்மீர் சென்றிருந்தனர்.
பஹல்காம் செல்ல திட்டமிட்டிருந்த இவர்கள், அன்றைய தினமன்று அதே நேரத்தில் அந்தப் பகுதிக்குச் செல்லவில்லை. இதனால் உயிரிழப்பு மற்றும் காயங்களிலிருந்து தப்பியுள்ளனர். இது தொடர்பாக பஹல்காம் சுற்றுலா சென்ற மதுரையைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் தனியார் ஊடகம் ஒன்றிக்கு பேட்டி அளிக்கையில் இதனை தெரிவித்து கொண்டார்.
இது தொடர்பாக அவர்பேசுகையில், ”தாக்குதலுக்கு உள்ளான இடத்தை நேற்று (ஏப்.22) காண்பதற்கு 68 பேரும் திட்டமிட்டிருந்தோம். நாங்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்துள்ளது. சில நிமிடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக எங்களுக்கு தகவல் வந்தது.
அதனைக் கேட்டதும் சந்துரு என்பவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால், சந்துரு என்பவர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்பொழுது நலமாக இருக்கிறர், மற்றவர்கள் அனைவரும் ஸ்ரீநகர் வழியாக இன்று(ஏப்.23) ஊர் திரும்ப திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து எங்களை தொடர்பு கொண்டு பேசினார்கள்” என்றார்.