ஜம்மு காஷ்மீரில் ஊடுருவல்… 5 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. இந்த என்கவுன்டரில் மேலும் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளதாக காஷ்மீர் ஏடிஜிபி தெரிவித்துள்ளார். இதன் மூலம் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டு, தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது தொடர்பான கூடுதல் தகவல்கள் கிடைத்தவுடன் தெரிவிக்கப்படும் என்று காஷ்மீர் ஏடிஜிபி தெரிவித்துள்ளார். இந்த என்கவுன்டர் குறித்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், குப்வாரா காவல்துறை அளித்த குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில், மச்சில் செக்டாரில் என்கவுன்டர் தொடங்கியது. இந்திய எல்லைப் பகுதிக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்தது. எல்லை வேலி அருகே பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் கண்காணித்தவுடன், பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதையடுத்து, பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு தொடங்கியது என தெரிவித்தார். இதுவரை மொத்தம் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். முன்னதாக இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தற்போது மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதை காஷ்மீர் ஏடிஜிபி உறுதிப்படுத்தினார் என கூறினார்.
இந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரீல் கொல்லப்பட்ட 46 பயங்கரவாதிகளில் 37 பேர் வெளிநாட்டு பயங்கரவாதிகள் என்றும் ஒன்பது பேர் உள்ளூர்வாசிகள் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் உள்ளூர் பயங்கரவாதிகளை விட வெளிநாட்டு பயங்கரவாதிகள் நான்கு மடங்கு அதிகமாக கொல்லப்படுவது இதுவே முதல் முறை.