இந்தூர் கோவில் கிணறு இடிந்து விபத்து..! பலி எண்ணிக்கை 35ஆக அதிகரிப்பு…
இந்தூர் கோவில் கிணறு இடிந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று ராம நவமியை முன்னிட்டு படேல் நகரில் உள்ள பாலேஷ்வர் மகாதேவ் கோவிலில் பூஜைகள் செய்ய படிக்கட்டுக் கிணற்றின் அருகே பலர் கூடியிருந்தனர். அப்பொழுது, திடீரென கோயிலில் உள்ள படிக்கட்டு கிணற்றின் மேல் கூரை இடிந்து விழுந்துள்ளது. கிணற்றின் மேல் கூரை இடிந்து விழுந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தற்போது, கிணற்றின் படிக்கட்டுகள் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்து வருகிறது. மேலும்,19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்து நேரில் சென்று ஆய்வு செய்த அம்மாவட்ட ஆட்சியர், 50-க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் சிக்கியுள்ளதாகவும், உயிரிழந்தோரில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, முழு மருத்துவச் செலவையும் மாநில அரசே ஏற்கும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.