விமான ஊழியர்களால் பாரா விளையாட்டு வீராங்கனைக்கு மோசமான அனுபவம்: மன்னிப்பு கேட்ட இண்டிகோ நிறுவனம்
இண்டிகோ விமானத்தில் பயணித்த போது விமான ஊழியர்களால் தனக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டதாக பாரா விளையாட்டு வீராங்கனை சுவர்னா ராஜ் புகார் தெரிவித்திருந்த நிலையில் சம்பவம் தொடர்பாக இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. சுவர்னா ராஜ் அண்மையில் டெல்லியில் இருந்து சென்னை நோக்கி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தார்.
பயணத்தின் போது தனது தனிப்பட்ட வீல்சேரை தன்னுடன் வைத்துக் கொள்ள அனுமதிக்குமாறு கேட்ட போது தனது கோரிக்கைக்கு பதிலளிக்காமல் விமான நிறுவன ஊழியர்கள் புறக்கணித்ததாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து பேசிய அவர், விமானத்தின் கதவு அருகே தனது தனிப்பட வீல்சேரை வைக்கும்படி பத்து முறைக்கும் மேல் தான் கோரிய போதும் அதை விமான நிறுவன ஊழியர்கள் காது கொடுத்தும் கேட்கவில்லை என்றும் தனது கோரிக்கையை விமான ஊழியர்கள் அலட்சியமாக புறக்கணித்ததாகவும் தெரிவித்தார்.
காங்கிரஸின் வெற்றி டெல்லியில் இருந்தே தொடங்கும்… கார்கே நம்பிக்கை!
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் இண்டிகோ விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. அநிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த விஷயத்தை உடனடியாக சரி செய்வதற்கான முயற்சியில் உள்ளோம். இதுகுறித்து சுவர்னா ராஜை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம். எங்கள் பயணிகளின் விமான பயண அனுபவம் சிறப்பாக இருக்கவே அர்ப்பணிப்புடன் இயங்குகிறோம், சுவர்னா ராஜுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.